முடிந்தது தொகுதி பங்கீடு; மஹாராஷ்டிராவில் 150 தொகுதிகளில் பா.ஜ., போட்டி?
முடிந்தது தொகுதி பங்கீடு; மஹாராஷ்டிராவில் 150 தொகுதிகளில் பா.ஜ., போட்டி?
ADDED : செப் 10, 2024 04:41 PM

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., 140 முதல் 150 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 287 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பாஜ., -சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகிக்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாதியில் விட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி உள்ளது.
இதன்படி, பா.ஜ.,140 முதல் 150 வரை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு 80 தொகுதிகளிலும், அஜித்பவார் 55 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடும் எனவும், சிறிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.