இந்தியா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்: பாக் அணு ஆயுத சோதனை குறித்து ராஜ்நாத் சிங் பதிலடி
இந்தியா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்: பாக் அணு ஆயுத சோதனை குறித்து ராஜ்நாத் சிங் பதிலடி
ADDED : நவ 07, 2025 04:45 PM

புதுடில்லி: இந்தியா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும் என பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: யாருடைய தலையீடு காரணமாகவும் பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்ததால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கப்பட்டால் உள்ளே நுழைந்து தாக்குவோம். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விஷயங்களில் நாட்டின் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் முடிவுகளை எடுக்கும். இந்தியா என்ன செய்யும் என்பதை எதிர்காலம் சொல்லும். அமெரிக்கா அல்லது பாகிஸ்தான் என்ன செய்கிறதோ அதனால் இந்தியா அழுத்தம் கொடுக்கப்படாது. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யலாம். சரியான நேரத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை செய்வோம்.
பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது இந்தியாவின் நீண்ட கால கொள்கையாக இருக்கிறது. இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் பொதுமக்கள் பகுதிகளை அல்ல, பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைப்பதில் கவனமாக இருந்தன. நாங்கள் பயங்கர வாதிகளை குறிவைத்தோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

