தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உலோக 'பெல்லட்' குண்டுகளுக்கு தடை கோர கூடாது!பயன்பாட்டு நெறிமுறை வகுக்க கோரலாம் :டில்லி போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

உலோக 'பெல்லட்' குண்டுகளுக்கு தடை கோர கூடாது!பயன்பாட்டு நெறிமுறை வகுக்க கோரலாம் :டில்லி போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

உலோக 'பெல்லட்' குண்டுகளுக்கு தடை கோர கூடாது!பயன்பாட்டு நெறிமுறை வகுக்க கோரலாம் :டில்லி போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து


UPDATED : ஜூலை 30, 2026 10:06 PM

ADDED : ஜூலை 30, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 10:06 PM ADDED : ஜூலை 30, 2026 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-டில்லி சிறப்பு நிருபர்-

'உலோக துகள்கள் அடங்கிய ரப்பர் குண்டுகள் எனப்படும், 'பெல்லட்' குண்டுகளுக்கு தடை கோருவதற்கு பதிலாக, அதை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி மனுவில் திருத்தம் செய்யுங்கள்' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, டில்லி ஜந்தர் மந்தரில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தியது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய ஜூலை 20ம் தேதி, பார்லி., நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது.

அப்போது போராட்டக்காரர்களை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, வன்முறை ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது, உலோக துகள்கள் அடங்கிய ரப்பர் குண்டுகள் எனப்படும், 'பெல்லட்' குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய தகவல் கமிஷனரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியுமான யஷோவர்தன் ஆசாத் மற்றும் குண்டுகளால் காயமடைந்த இருவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்போது, உலோக துகள்கள் அடங்கிய 'பெல்லட்' குண்டுகளை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க வேண்டும். எதிரே நிற்பவரின் உடல் பாகத்தை குறிவைத்து இந்த வகை குண்டுகளால் சுட முடியாது. துப்பாக்கியில் இருந்து இந்த குண்டுகள் வெளியேறும்போது பரவலாக சிதறும். அப்போது போராட்டத்தில் ஈடுபடுவோரின் கண்கள், கைகள், கால்கள், முக்கிய உறுப்புகள் என எங்கு வேண்டுமானாலும் உலோக துகள்கள் துளைக்கும். இதனால், காயங்கள் பெரிதாக ஏற்படும்.

ஆபத்து குறைவான ஆயுதம் என கூறப்பட்டாலும், அதிக விசை கொண்ட துப்பாக்கிகள் மூலம் உலோக துகள்கள் கொண்ட பெல்லட் குண்டுகள் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

தவிர, கடந்த 20ம் தேதி டில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் தரப்பில் எந்தவித முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. முதலில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அடுத்ததாக தடியடி நடத்தப்பட்டது. இறுதியாக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால், போராட்டத்தில் பங்கேற்ற பலருக்கு உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், ''பெல்லட் குண்டுகளால் படுகாயமடைந்த பிரஷாந்த் குமார் மற்றும் ஷேக் இர்ஷத் மன்சூரி இருவருக்கும் டில்லி அரசு உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும். பெல்லட் குண்டுகள் பயன்பாட்டுக்கு முழு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ''போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் உள்ளிட்ட சட்ட அமலாக்கத் துறையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது தெளிவற்றதாக தெரிகிறது. அதற்கு பதிலாக, அத்தகைய ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் போலீஸ் விதிமுறைகளை எதிர்த்தே மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே, மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்,'' என்றார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், ''போலீசாரின் விதிகளை கண்டறிவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, அந்த விதிகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர், ''அதிவிரைவு படையின் ஆயுத களஞ்சியத்தில் 'பெல்லட்' குண்டுகளே இருக்கக் கூடாது என கூறவில்லை. அவை, பொதுமக்களை தாக்க பயன்படுத்தக் கூடாது என்று தான் வலியுறுத்துகிறோம். காயமடைந்தவர்களின் உடல்களில் இருந்து உலோக துகள்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வன்முறையின் போது அது பயன்படுத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது,'' என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அமைதியான முறையில் போராட்டங்கள் நடக்கும்போது, சில நேரம் சமூக விரோதிகள் அதில் ஊடுருவி விடுகின்றனர். அப்போது சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க சூழ்நிலைக்கு தக்கவாறு, போலீசார் படிப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, அதிவிரைவு படையினர் பயன்படுத்திய பெல்லட் குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்களின் பயன்பாட்டு பதிவு புத்தகத்தை பத்திரமாக பாதுகாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அச்சமின்றி கடமையாற்றுங்கள் சி.ஆர்.பி.எப்.,க்கு 'அட்வைஸ்' பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அச்சமின்றி கடமையாற்றுமாறு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படைக்கு, அதன் தலைவரான ஞானேந்திர பிரதாப் சிங் தைரியம் கொடுத்துள்ளார். சி.ஆர்.பி.எப்., படையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், ''களத்தில் செயல்படும் படைப்பிரிவாக இருந்தாலும் சரி, அல்லது சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பிரிவாக இருந்தாலும் சரி; நேர்மையான முறையில் துணிச்சலாக கடமையாற்றுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us