ADDED : ஆக 13, 2026 09:01 PM
ஆட்டோ, கார் முன்பதிவு செயலிகள்... மத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடில்லி: ‘ஊபர், ஓலா, ராபிடோ’ உள்ளிட்ட, ‘மொபைல் போன்’ செயலிகள் வாயிலாக கார், ஆட்டோ முன்பதிவு செய்யும் பயணியரிடம், பயணத்தை துவங்குவதற்கு முன், ‘டிப்ஸ்’ எனப்படும், கூடுதல் தொகையை செலுத்தும்படி கேட்கக்கூடாது’ என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டுள்ளது.
நகர்புறங்களில் கார், ஆட்டோ பயணத்துக்கு என, ‘ஊபர், ஓலா, ராபிடோ’ உள்ளிட்ட மொபைல் போன் செயலிகள் உள்ளன. அதில் எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்பதையும், எந்த வகை வாகனம் என்பதையும் தேர்வு செய்யலாம்.
தற்போது இந்த செயலிகளில் முன்பதிவின் போதே கூடுதல் தொகை செலுத்த கோரப்படுகிறது. அவ்வாறு செலுத்த தயார் என்பவருக்கே கார், ஆட்டோ கிடைப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது, கூடுதல் தொகை செலுத்தினால் தான் டிரைவர் பயணத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து பலர் புகார் அளித்திருந்தனர்.
மத்திய அரசு, ‘ஆன்லைன்’ வாயிலாக ஆட்டோ, கார் முன்பதிவு செய்ய உதவும் செயலிகளுக்கு கடந்த ஆண்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், ‘பயணியர் விருப்பப்பட்டால் டிரைவருக்கு டிப்ஸ் வழங்கலாம். ஆனால், பயணம் முடிந்த பின்னரே வழங்கும் வகையில் செயலியில் மாற்றம் செய்ய வேண்டும். பயணி வழங்கும் டிப்ஸ் தொகை முழுவதும் டிரைவருக்கே வழங்கப்பட வேண்டும். அதில் எந்த தொகையையும் செயலியை நிர்வகிக்கும் நிறுவனம் பிடித்தம் செய்யக்கூடாது.
‘ஆட்டோ, கார் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அல்லது விரைவாக கிடைப்பதற்காக பயணத்திற்கு முன் கூடுதல் தொகை செலுத்தும்படி கேட்கக்கூடாது’ என கூறபட்டு இருந்தது.
இந்த விதி மீறப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆட்டோ, கார் முன்பதிவு செயலிகளுக்கு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு:
வாடகை ஆட்டோ, கார் முன்பதிவு செயலிகள் 2025 வழிகாட்டுதல்களுக்கு மாறாக தங்கள் செயலிகளில் உள்ள வசதிகளை நீக்க வேண்டும். பயணம் முடிவதற்கு முன், ‘டிப், ஆட்- – ஆன்’ அல்லது வேறு எந்த பெயரிலும் கூடுதல் கட்டண வசதியை காட்டக்கூடாது.
கூடுதல் தொகை செலுத்தினால் டிரைவர் பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும், கார் அல்லது ஆட்டோ விரைவாக உறுதி செய்யப்படும், காத்திருக்கும் நேரம் குறையும் என்ற எண்ணத்தை பயணியருக்கு ஏற்படுத்தும் வகையில் எந்த வசதியும் இருக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயணம் துவங்குவதற்கு முன், ‘டிப்’ கேட்கும் நடைமுறை தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும், இதற்கு முன் நடவடிக்கை எடுத்துள்ளது.
