ADDED : ஜன 22, 2024 01:55 AM
ஆமதாபாத் : குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில், கோதல்தாம் அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
புற்றுநோய் சிகிச்சைக்கு என்றே பிரத்யேகமாக, 30 புதிய மருத்துவமனைகளை பா.ஜ., அரசு திறந்துள்ளது.
நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய, கிராமங்கள் அளவில் 1.50 லட்சம் சுகாதார மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், நம் நாட்டில் பெருகி வரும் புதிய கலாசாரம் குறித்து பேச விரும்புகிறேன்.
திருமணங்களை வெளிநாடுகளில் வைத்து நடத்தும் புதிய கலாசாரம் பெருகி வருகிறது. இந்த திருமணங்களை உள்நாட்டிலேயே நடத்த முடியாதா?
நம் செல்வத்தை ஏன் வெளிநாடுகளில் சென்று சேர்க்க வேண்டும்? இந்த கலாசாரம் பரவுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே திருமணம் செய்து கொள்வோம் என்பதை இளையதலைமுறை உறுதியுடன் கூற வேண்டும்.
அதே போல, சுற்றுலா செல்பவர்கள் முதலில் நம் நாட்டில் உள்ள இடங்களை முழுமையாக சென்று பாருங்கள். அப்போது தான் நம் நாட்டு சுற்றுலா வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.