'டபுள் டெக்கர்' பஸ் 10 நாட்களில் ரூ.2.99 லட்சம் வருமானம்
'டபுள் டெக்கர்' பஸ் 10 நாட்களில் ரூ.2.99 லட்சம் வருமானம்
ADDED : பிப் 20, 2025 01:49 AM

மூணாறு:மூணாறில் இயக்கப்படும் 'டபுள் டெக்கர்' பஸ் மூலம் பத்து நாட்களில் ரூ.2.99 லட்சம் வருவாய் கிடைத்தது.
மூணாறின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில்' ராயல் வியூ டபுள் டெக்கர்' எனும் திட்டத்தில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.,8ல் பயன்பாட்டுக்கு வந்தது. பஸ் சுற்றிலும், கூரையும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் பஸ்சில் பயணித்தவாறு வெளிப்புற காட்சிகளை ரசிக்கலாம்.
இந்த பஸ் பயன்பாட்டுக்கு வந்து பத்து நாட்களில் 869 பேர் பயணித்தனர். அதன் மூலம் அரசுக்கு ரூ.2,99, 200 வருவாய் கிடைத்தது.
நேரம்: பழைய மூணாறில் அரசு பஸ் டிப்போவில் இருந்து காலை 9:00, மதியம் 12:30, மாலை 4:00 மணிக்கு பஸ் புறப்படுகிறது.
கேப் ரோடு, பாறைகுகை, பெரியகானல் நீர்வீழ்ச்சி, ஆனயிறங்கல் அணை ஆகிய பகுதிகளை பார்த்து திரும்பலாம்.
கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரபூர்வ அலைபேசி செயலி மற்றும்onlineksrtcswift.comஎன்ற இணைய தளம் வாயிலாகவும், பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நேரிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
'தற்போது வெளிநாட்டு பயணிகள் பஸ்சில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், கோடை சுற்றுலா சீசன் துவங்க உள்ளதால் உள்நாட்டு பயணிகள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும்' அதிகாரிகள் தெரிவித்தனர்.

