ADDED : செப் 25, 2024 09:19 PM

சிக்கமகளூரு, : மகளை கொலை செய்துவிட்டு, யாரோ கொன்றதாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டுஉள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம், அஜ்ஜம்புராவின், ஷிவனி ஆர்.எஸ்., கிராமத்தில் வசிப்பவர் மஞ்சுநாத், 32. இவர் பெங்களூரை சேர்ந்த மங்களா, 27, என்பவரை காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு வேதா, 5, என்ற மகள் இருந்தார்.
சமீப நாட்களாக மனைவியின் நடத்தையில், மஞ்சுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.
'மனைவிக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது. மகள் வேதா தனக்கு பிறக்கவில்லை' என, குற்றஞ்சாட்டி தகராறு செய்தார். இதே விஷயமாக வீட்டில் சண்டை நடந்தது. மஞ்சுநாத் தினமும் குடிபோதையில் வந்து, மனைவியை தாக்கி துன்புறுத்தினார்.
செப்டம்பர் 19ம் தேதி இரவு, மஞ்சுநாத் வழக்கம் போன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். மகளை பார்த்து, 'என்ன செய்கிறாய்?' என கேட்டார். அப்போது மகள் வேதா, 'அதை கேட்க நீ யார்? குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாய்' என திட்டினாள்.
மகளின் பேச்சால் கோபமடைந்த மஞ்சுநாத், இரும்பு கம்பியால் மகளின் தலையில் அடித்துள்ளார். இதில் வேதா உயிரிழந்தாள்.
அதன்பின் அக்கம், பக்கத்தினரிடம், 'வீட்டில் தனியாக இருந்த என் மகளை, யாரோ பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்துள்ளனர்' என, கதை கட்டினார். போலீசாரிடமும் இதே கதையை கூறினார்.
தகவலறிந்து அங்கு வந்த அஜ்ஜம்புரா போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிந்தது.
அதன்பின் தந்தையை போலீசார் விசாரித்தபோது, மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.