ADDED : அக் 17, 2025 11:30 PM

புதுடில்லி: “குடிநீர் கட்டண நிலுவையில் தாமதக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதுவரை, 6.56 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது,” என, நீர்வளம் மற்றும் பொதுப்பணித் துறை பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா கூறினார்.
வரவேற்பு
இதுகுறித்து, அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறியதாவது:
வீட்டு உபயோகத்துக்கான குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்தினால் விதிக்கப்பட்டுள்ள தாமதக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
பிப். 1 முதல் மார்ச் 31 வரை செலுத்துவோருக்கு தாமதக் கட்டணத்தில் 70 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ரேகா குப்தா 14ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து, பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் குடிநீர் கட்டண நிலுவையை செலுத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் வரை, 3,635 பேர் 6.56 கோடி ரூபாய் செலுத்தி தங்கள் நிலுவையை பைசல் செய்துள்ளனர்.
இதில், தாமதக் கட்டணம் 9.17 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு அளித்து நிலுவைத் தொகையை செலுத்தி வருகின்றனர்.
குடிநீர் குழாய் பராமரிப்பு, சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு, மாநகர் முழுதும் பழைய குடிநீர் குழாய்களை மாற்றுதல் ஆகியவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்.
குடிநீர் கட்டணம் 5,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இது, ஜனவரி 31ம் தேதிக்குள் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, சட்டவிரோத குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கும் அபராதத் தொகை குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலம் மீட்பு
மத்திய ஜல் சக்தி அமைச்சக கூடுதல் செயலர் சுபோத் யாதவ் தலைமையில், நேற்று முன் தினம் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மதிப்பாய்வு, நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை நதி மேம்பாடு ஆகியவை குறித்து விரிவான ஆலோசனை நடந்தது.
இதில், 9,203 கோப்புகள் மற்றும் 4,233 டிஜிட்டல் -கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. கழிவுகளை அகற்றுதல் மற்றும் இதர நடவடிக்கைகளில் 33,940 சதுர அடி இடம் மீட்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.