போலீஸ்காரர் மீது காரை மோதச்செய்து 500 மீட்டர் இழுத்துச் சென்ற டிரைவர்
போலீஸ்காரர் மீது காரை மோதச்செய்து 500 மீட்டர் இழுத்துச் சென்ற டிரைவர்
ADDED : ஜன 30, 2026 04:32 AM
நொய்டா : கிரேட்டர் நொய்டாவில், வாகன சோதனையை தவிர்ப்பதற்காக, ஒரு கார் டிரைவர், போக்குவரத்து போலீஸ்காரர் மீது காரை மோதியதுடன், காரின் முன்பக்க பானெட்டில் விழுந்த அவரை, 500 மீட்டர் துாரத்திற்கு இழுத்துச் சென்றார். இந்தச் சம்பவம் டில்லியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில், பி3 ரவுண்டானா பகுதியில், குர்மீத் சவுத்ரி என்ற போலீஸ்காரர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சிவப்பு நிற காரை நிறுத்தும்படி சைகை காட்டினார்.
ஆனால், காரை ஓட்டி வந்தவர், அதை நிறுத்தாதது மட்டுமின்றி, போலீஸ்காரர் மீதும் மோதினார். அதில், காரின் முன்பக்க பானெட்டில் விழுந்த போலீஸ்காரரை, அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு இழுத்தும் சென்றார். அதன்பின், காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார்.
இந்த சம்பவத்தை அவ்வழியாகச் சென்ற ஒருவர், தனது மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அதில், போக்குவரத்து போலீஸ்காரர் குர்மீத் சவுத்ரி, காரின் பானெட்டைப் பிடித்துக் கொண்டிருக்க, கார் அதிவேகமாக செல்வது தெரிகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தில், குர்மீத் சவுத்ரி பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பிவிட்டார்; அவர் நலமாக உள்ளார்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் பற்றி கூடுதல் துணை ஆணையர் சுதிர் குமார் கூறுகையில், ''அடையாளம் தெரியாத ஓட்டுநர் மீது, பீட்டா --2 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரர் மீது மோதிய சிவப்பு நிற கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
கொலை முயற்சி, கவனக்குறைவாக கார் ஓட்டுதல் மற்றும் அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் உட்பட, பாரதிய நியாய சன்ஹிதாவின் சட்டத்தின் கீழ், கார் டிரைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள அந்த டிரைவரை அடையாளம் கண்டு கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

