ADDED : பிப் 21, 2025 05:28 AM

சிக்கமகளூரு: ஆசிரியையை கழுத்தை நெரித்து கொன்று, டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு தாலுகா தாசரஹள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. சந்தேகம் அடைந்த கிராம மக்கள் காரின் அருகே சென்று பார்த்த போது, காருக்குள் இளம்பெண் இறந்து கிடந்தார். சிறிது துாரத்தில் உள்ள மரத்தில், வாலிபர் துாக்கில் சடலமாக தொங்கினார். சிக்கமகளூரு ரூரல் போலீசார் விசாரித்தனர். இளம்பெண், வாலிபர் பற்றிய விபரம் நேற்று தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இளம்பெண்ணின் பெயர் பூர்ணிமா, 24. ராம் நகரின் மாகடியை சேர்ந்தவர்; வாலிபர் பெயர் மது, 26. ஷிவமொக்காவின் பத்ராவதியை சேர்ந்தவர். பூர்ணிமா, தனியார் பள்ளி ஆசிரியை. மது, மாகடியில் வாடகை கார் ஓட்டினார்.
மது, பூர்ணிமா குடும்பத்தினர் ஐந்து ஆண்டுகளாக நட்பாக பழகி வந்து உள்ளனர். இருவர் வீட்டிலும் நடக்கும் சுபநிகழ்ச்சிகளை ஒன்றாக நின்று செய்தனர். பத்ராவதியில் உள்ள மது வீட்டிற்கு, பூர்ணிமா குடும்பத்தினர் அடிக்கடி சென்று வந்தனர்.
மதுவிடம் பூர்ணிமா நட்பாக பழகி உள்ளார். ஆனால் மது, பூர்ணிமாவை ஒருதலையாக காதலித்து இருக்கலாம் என்று, எங்களுக்கு சந்தேகம் உள்ளது. பள்ளி முடிந்ததும் காரில் அவரை, 'பிக் அப்' செய்து உள்ளார். வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, தாசரஹள்ளி கிராமத்திற்கு அழைத்து வந்து உள்ளார்.
பூர்ணிமாவிடம், தனது காதலை வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால், அதற்கு அவர் மறுத்ததால் கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. பூர்ணிமா கழுத்தை நெரித்தற்கான தடயங்களும் உள்ளன. இதனால் அவரை கொன்று மது தற்கொலை செய்து இருக்கலாம். இதுபற்றி விசாரிக்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

