கூடுதல் பணம் கொடுக்க மறுத்த பயணியை திட்டிய டிரைவர்
கூடுதல் பணம் கொடுக்க மறுத்த பயணியை திட்டிய டிரைவர்
ADDED : டிச 23, 2024 06:53 AM
பத்மநாபநகர்: கூடுதலாக பணம் கொடுக்க மறுத்த பயணியை வாடகை கார் டிரைவர் ஆபாசமாக திட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
பெங்களூரு, பத்மநாபநகர் ஆர்.கே., லே - அவுட்டில் வசிப்பவர் சுபம். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம், ஒரு உறவினர் வந்திருந்தார். தன் வீட்டிற்கு திரும்பிச் செல்ல, அவர் ஓலா செயலி வாயிலாக வாடகை காரை, சுபம் முன்பதிவு செய்தார்.
'பிக் அப்' பாயின்டிற்கு டிரைவர் காந்தராஜ் என்பவர் வந்தார். டிரைவரிடம், தன் உறவினரை ஒரு இடத்தில் இறக்கிவிடும்படி சுபம் கூறினார்.
“செயலியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடத்திற்கும், தற்போது கூறும் இடத்திற்கும் இடையே, 3 கி.மீ., துாரம் உள்ளது. இதனால் கூடுதல் பணம் கொடுக்க வேண்டும்,” என கேட்டுள்ளார். இதற்கு சுபம் மறுத்துள்ளார்.
முன்பதிவை ரத்து செய்வதாக சுபமும், உறவினரும் கூறி உள்ளனர். கோபம் அடைந்த காந்தராஜ், சுபத்தை ஆபாசமாக திட்டியதுடன் தாக்கவும் முயன்றுள்ளார். அப்பகுதி மக்கள் காந்தராஜை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவங்களை சுபம், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வீடியோ வேகமாக பரவும் நிலையில், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

