டிரைவர், கண்டக்டர்களிடம் லஞ்சம் பி.எம்.டி.சி.,யில் 7 பேர் 'சஸ்பெண்ட்'
டிரைவர், கண்டக்டர்களிடம் லஞ்சம் பி.எம்.டி.சி.,யில் 7 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 14, 2024 11:35 PM
பெங்களூரு: பணி ஒதுக்க டிரைவர், கண்டக்டர்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பி.எம்.டி.சி., அதிகாரிகள் ஏழு பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் சார்பில், பெங்களூரில் 6,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை பராமரிக்க 46 பணிமனைகள் உள்ளன.
இந்நிலையில் டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கவும், விடுமுறை அளிக்கவும், டிரைவர், கண்டக்டர்களுக்கு புதிய பஸ்களை கொடுக்கவும், பணிமனை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
டிரைவர், கண்டக்டர்களிடம் லஞ்சம் வாங்கியதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பூர்ணபிரக்னா லே - அவுட் பணிமனையில் பணியாற்றும், ஏழு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஜிகனி பணிமனை பொறுப்பாளர் மஞ்சுளா, இளநிலை உதவியாளர்கள் பிரீத்தம், மனோஜ், சுமா.
சாந்தவ்வா, தேவராஜ், உதவி கணக்கர் தனஞ்ஜெய் ஆகியோர், டிரைவர், கண்டக்டர்களிடம் 'போன் பே' மூலம் லஞ்சம் வாங்குவதாக, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனராக இருந்த சத்தியவதிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் சென்றது.
இதுகுறித்து விசாரணை நடத்த பி.எம்.டி.சி., ஊழல் தடுப்பு படைக்கு, சத்தியவதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் மஞ்சுளா உட்பட ஏழு பேரும், டிரைவர், கண்டக்டர்களிடம் லஞ்சம் வாங்கியது தெரிந்தது.
அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை ஆய்வு செய்த போது, 1 கோடி ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை இருந்தது.
இதுகுறித்து, பி.எம்.டி.சி., புதிய நிர்வாக இயக்குனர் ராமசந்திரனிடம், அறிக்கை அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மஞ்சுளா உட்பட, ஏழு பேரையும் 'சஸ்பெண்ட்' செய்து அவர் உத்தரவிட்டார்.