ராஜஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 'கரன்ட்' கட் ஆனதால் பரபரப்பு
ராஜஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 'கரன்ட்' கட் ஆனதால் பரபரப்பு
ADDED : மே 13, 2025 06:23 AM

புதுடில்லி : இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்தம் அமலான நிலையில், எல்லையில் உள்ள ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, நம் முப்படைகளின் அதிரடி தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் பயந்து போன பாக்., போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.
நான்கு நாட்களாக மோதல் தொடர்ந்த நிலையில், சண்டையை நிறுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து, கடந்த 10ம் தேதி மாலை 5:00 மணி முதல் போர் நிறுத்தம் அமலானது.
எல்லையில் உள்ள ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு ட்ரோன்கள் காணப்பட்டன.
இது குறித்து எச்சரித்த மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கையாக மின் வினியோகத்தை நிறுத்தியதோடு, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என, பொது மக்களுக்கு அறிவுறுத்தியது.
இதற்கிடையே, பார்மர் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை, மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது.
பார்மர், ஜெய்சால்மர் மாவட்டங்களில் நேற்று இயல்புநிலை காணப்பட்டது. எனினும், பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தன. குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.