ADDED : ஜூன் 11, 2025 01:31 AM

இம்பால்: மணிப்பூரின் சுராச்சந்திரபுர் மாவட்டத்தில், 55.52 கோடி ரூபாய் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேடுதல் வேட்டை
நம் அண்டை நாடான மியான்மர் மற்றும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சுராச்சந்திரபுர் மாவட்ட எல்லையில், கடந்த 5 முதல் 7 வரை, 'ஆப்பரேஷன் வொயிட் வெய்ல்' என்ற பெயரில் சிறப்பு தேடுதல் வேட்டை நடந்தது.
வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், சுங்கத்துறையினர், அசாம் ரைபிள்ஸ் படையினர், மணிப்பூர் போலீசார் இணைந்து, இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மணிப்பூரின் பெகியாங் கிராமத்தில் கடந்த, 6ல் சந்தேகத்திற்கு இடமாக இருவர் வாகனத்தில் வந்தனர். அவர்களை கூட்டுப்படையினர் பின்தொடர்ந்து சென்ற போது, சிங்னாகட் அருகேயுள்ள தடோ வெங் பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்றனர்.
அதிகாரிகள் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனையிட்டபோது, 219 சோப்பு பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ஹெராயின், எட்டு பார்சல்கள், சிறிய டின்களில் இருந்த 'ஓபியம்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இரு வாக்கிடாக்கிகள், 7.5 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சோப்பு பெட்டி
அங்கிருந்த ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், தப்பியோடிய இருவர் புல்காட் சோதனை சாவடியில் சிக்கினர்.
அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி, பிகியாங் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் நடத்திய சோதனையில் 7,755 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 54.29 கோடி ரூபாய்.
மேலும் 87.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓபியமும் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அளித்த தகவலின் பேரில், கடந்த 7ம் தேதி ஜூகோனுவாம் கிராமத்தில் இருவர் எடுத்து வந்த பைகளை சோதனையிட்டபோது, 440 சோப்பு பெட்டிகளில் இருந்த ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 55.52 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு போதைப் பொருள் கடத்தியது தெரியவந்தது.