செல்போன் டவரில் ஏறி கலாட்டா! போதை நபரை உள்ளே தள்ளிய போலீஸ்
செல்போன் டவரில் ஏறி கலாட்டா! போதை நபரை உள்ளே தள்ளிய போலீஸ்
ADDED : பிப் 02, 2025 05:19 PM

போபால்; போபாலில் குடிபோதையில் 80 அடி உயர செல்போன் டவரில் ஏறிய நபரால் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மத்தியபிரதேசம் மாநிலம் பார்கேடி பகுதியில் 80 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரம் இருக்கிறது. பரபரப்பான அந்த பகுதியில் மக்கள் அனைவரும் அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர்.
இந் நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு நபர், 80 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏற ஆரம்பித்தார். அவரை அங்குள்ளவர்கள் தடுத்து நிறுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களை பேச்சைக் கேட்காத அந்த நபர், சரசரவென்று கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கே சென்றுவிட்டார்.
கோபுரத்தின் உச்சியில் இருந்து கைகளை ஆட்டியபடி மக்களை அழைக்க, அனைவரும் திரும்பி பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்குள்ளவர்களில் சிலர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இன்னும் சிலர், அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிட்டனர். தகவலை அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ பகுதிக்கு உடனடியாக விரைந்தனர். மேலே ஏறிய நபருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சிறிதுநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், அந்த நபர் கீழே இறங்கி வந்தார். விசாரணையில் அவரது பெயர் விவேக் என்பதும், மதுபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி அட்டகாசம் செய்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.