ADDED : ஜன 20, 2025 07:03 AM

துமகூரு: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான டி.எஸ்.பி., ஜாமினில் வெளியே வந்த சில மணி நேரத்தில், இரண்டாவது பாலியல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
துமகூரு மதுகிரியில் போலீஸ் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் ராமசந்திரப்பா. நில பிரச்னை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு தனது அலுவலகத்தில் வைத்து, ராமசந்திரப்பா பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் ராமசந்திரப்பாவை மதுகிரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் ராமசந்திரப்பா மீது இன்னொரு பெண் அளித்த பாலியல் புகாரிலும் வழக்கு பதிவானது. முதல் வழக்கில் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் ராமசந்திரப்பா மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.யாதவ், கடந்த 16ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவு கிடைப்பதில் ஏற்பட்ட தாமத்தால், நேற்று முன்தினம் தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே 2வது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.