ADDED : அக் 02, 2024 08:13 PM
நேதாஜி நகர்:நகரமயமாக்கப்பட்ட கிராமங்கள், எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சியால் முறைப்படுத்தப்பட்ட காலனிகள் உட்பட நான்கு வகை குடியிருப்புகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்குவதற்கு டிஸ்காம்களுக்கு டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, டி.டி.ஏ.,வை துணைநிலை கவர்னர் அலுவலகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து இந்த அறிவிப்பை டி.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வழங்க வேறெந்த பரிந்துரையும் தேவையில்லை என, டி.டி.ஏ., விளக்கம் அளித்துள்ளது.
டி.டி.ஏ., அல்லது வேறு ஏதேனும் அரசு நிறுவனம் கடந்த காலத்தில் தடையில்லாச்சான்று வழங்கிய அல்லது ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தால் மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிலங்களிலும் புதிய மின் இணைப்புகளை டிஸ்காம்கள் வழங்கலாம்.
டி.டி.ஏ.,யின் அறிவிப்பால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்ட 105 நகரமயமாக்கப்பட்ட கிராமங்கள், மாநகராட்சியால் முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் வசிப்போர் பலனடைவர்.

