ADDED : ஜன 11, 2025 01:49 AM
புதுடில்லி: ரயிலில், குடி போதையில் பெண் பயணியரிடம் அத்துமீறிய பயணியை, டி.டி.இ., எனப்படும் ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில் பெட்டி உதவியாளர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பீஹாரின் கதிஹார் மாவட்டத்தில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்துக்கு, அமிர்தசரஸ் - கதிஹார் எக்ஸ்பிரஸ் ரயில் சமீபத்தில் சென்றது. இந்த ரயிலில் தலைநகர் டில்லிக்கு செல்ல, லாரி டிரைவர் ஷேக் தாசுதீன் என்பவர் ஏறினார்.
'எம் 2' பெட்டியில் பயணித்த இவர், ரயில் பெட்டியின் உதவியாளர்கள் விக்ரம் சவுகான், சோனு மஹதோ ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.
போதை தலைக்கேறிய நிலையில், ரயிலிலிருந்த பெண் பயணியரிடம் ஷேக் தாசுதீன் அத்துமீறினார்.
இதை தட்டிக்கேட்ட விக்ரம் சவுகானை, கன்னத்தில் அறைந்தார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையறிந்த டி.டி.இ., ராஜேஷ் குமார், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது, அவரையும் ஷேக் தாசுதீன் அறைந்தார். இதனால் கோபமடைந்த டி.டி.இ., ராஜேஷ் குமார் மற்றும் ரயில் பெட்டி உதவியாளர் விக்ரம் சவுகான் ஆகியோர் ஷேக் தாசுதீனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவர் மீது ராஜேஷ் குமார் அமர்ந்த நிலையில், 'பெல்ட்'டால் விக்ரம் சவுகான் சரமாரியாக தாக்குவது, பயணி ஒருவர் மொபைல் போனில் எடுத்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீசார், உத்தர பிரதேசத்தின் பிரோசாபாதில், குடிபோதையில் இருந்த ஷேக் தாசுதீனை ரயிலிலிருந்து இறக்கி விட்டனர்.
டி.டி.இ., ராஜேஷ் குமார், ரயில் பெட்டி உதவியாளர்கள் விக்ரம் சவுகான், சோனு மஹதோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், மூன்று பேரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குடி போதையில் அத்துமீறிய ஷேக் தாசுதீன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

