துவண்டு போனது துஷ்யந்த் சவுதாலா கட்சி : அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு ஒட்டம் ?
துவண்டு போனது துஷ்யந்த் சவுதாலா கட்சி : அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு ஒட்டம் ?
ADDED : ஆக 17, 2024 07:24 PM

சண்டிகர்: ஹரியானா சட்டசபைக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அம்மாநில பிரதான கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பா.ஜ., நோக்கி படை எடுக்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் , ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக். 01ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இம்முறை ஹரியானாவில் பா.ஜ., காங்., ஜே.ஜே.பி., மற்றும் ஆம் ஆத்மி என நான்குமுனை போட்டி என்ற நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹரியானாவில் தற்போது ஆளும் பா.ஜ., முதல்வர் நாயாப் சிங் சைனி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜே.ஜே.பி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பா.ஜ., பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றது. எனினும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்தார் முதல்வர் நயாப்சிங் சைனி.
இந்நிலையில், இன்று துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் பா.ஜ.,வில் இணையை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

