ADDED : அக் 15, 2024 12:20 AM

பெங்களூரு: தசரா விடுமுறை முடிந்த நிலையில், ஒரே நாளில் ஏராளமானோர் பெங்களூரு திரும்பியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. பள்ளி மாணவர்களும், பணிக்கு சென்றோரும் பாதிக்கப்பட்டனர்.
ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை இருந்தது. இதனால், பெங்களூரில் வசிக்கும் ஏராளமானோர் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். கர்நாடகாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்றனர்.
விடுமுறை முடிந்த நிலையில், நேற்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெங்களூருக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர். ஒரே நேரத்தில் நகரின் அனைத்து திசைகளில் இருந்தும், ஏராளமான வாகனங்கள் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட துார வாகனங்கள்
அத்திப்பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, மடிவாளா, சாந்திநகர், பனசங்கரி, கே.ஆர்.புரம், டின் பேக்டரி, ஹெப்பால், நாகவாரா, எலஹங்கா, மேக்ரி சதுக்கம், சிவானந்தா சதுக்கம், மெஜஸ்டிக், கார்ப்பரேஷன் சதுக்கம், டவுன்ஹால், மாகடி சாலை, ராஜாஜிநகர், நாயண்டஹள்ளி, கெங்கேரி, பிடதி, யஷ்வந்த்பூர், நெலமங்களா என, நகரை சுற்றி உள்ள பகுதிகளில் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
இதற்கிடையில், சாரல் மழை பெய்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்தனர்.
மழை நின்றுவிடும் என்று எதிர்பார்த்தும் பயனில்லை. நேரம் ஆக ஆக வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தன.
வேறு வழியின்றி போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் வாகனங்கள் ஊர்ந்து, ஊர்ந்து சென்றன. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்ல முடியாமல் பலரும் திணறினர்.
மாநில பாடத் திட்ட பள்ளிகளுக்கு, வரும் 20ம் தேதி தான் தசரா விடுமுறை முடிகிறது. ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.
அரண்மனை நகர் என, அழைக்கப்படும் மைசூரு நகர் சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமானது. ஆண்டு முழுதும் சுற்றுலா பயணியர் வருவர். தசரா நேரத்தில் இவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதேபோன்று இம்முறையும், உள்நாடு, வெளி நாடுகளின் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்தனர். தசரா நிகழ்ச்சிகள், ஜம்பு சவாரியை கண்டு ரசித்தனர்.
தசரா முடிந்தும், சுற்றுலா பயணியர் மைசூரை விட்டுச் செல்லவில்லை. மழையிலேயே நகரை சுற்றிப் பார்க்கின்றனர். சாமுண்டி மலை, மிருகக்காட்சி சாலை, மலர்க்கண்காட்சி, பொருட்காட்சிக்கு வருகின்றனர். மைசூரின் சுற்றுப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்கின்றனர். கார்கள், பைக்குகளில் வருவதால் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. மிருகக்காட்சி சாலைக்கும், சுற்றுலா பயணியர் குவிகின்றனர். நேற்று மைசூரில் மழை பெய்தும், அவர்களின் ஆர்வம் குறையவில்லை.
80 டன் குப்பை
மைசூரு தசரா விழாவையொட்டி, நகரில் உருவாகும் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு, 500 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தினமும் உருவாகும் குப்பையை அகற்றுவது மட்டுமே இவர்களின் பிரதான பணி.
எந்த தெருவில் குப்பை காணப்பட்டாலும் உடனடியாக அகற்றும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. நகரமே சுத்தமாக காணப்பட்டது. ஆங்காங்கே குப்பை தொட்டிகள் இருந்தும், பலரும் சாலைகளில் குப்பை போட்டுவிட்டுச் சென்றனர்.
ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்த, இம்மாதம் 12ம் தேதி, ஏராளமான சுற்றுலா பயணியர் மைசூரில் குவிந்தனர். இவர்கள் போட்ட குப்பையை அகற்றும் பணியில் நேற்று முன்தினம் நாள் முழுதும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அரண்மனை வளாகம் உட்பட நகரின் பல பகுதிகளில், காலை முதல் மாலை வரை குப்பைகள் அகற்றப்பட்டன.
குறிப்பாக, அரண்மனை வளாகத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் உள்ள பன்னி மண்டபம் வரையிலும்; குப்பண்ணா பூங்கா, மஹாராஜா கல்லுாரி மைதானம் உட்பட வெவ்வேறு பகுதிகளில் குப்பை அகற்றப்பட்டது. மொத்தம் 80 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதில், 22 டன் பிளாஸ்டிக் குப்பைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, மைசூரு மாநகராட்சி சுற்றுச்சூழல் பிரிவு உதவி செயற் பொறியாளர் மிருதுஞ்செயா கூறுகையில், ''அக்., 3 முதல், தினமும் 45 டன் முதல், 50 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இறுதி நாளில் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இதற்காக 500 துப்புரவு பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றினர்,'' என்றார்.