ADDED : மே 15, 2025 07:01 PM
ஷாஹதரா:தேசிய தலைநகர் டில்லியை நேற்று முன்தினம் இரவு முழுதும் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் இருந்து புழுதிப்புயல் நம் நாட்டின் வடக்கு மாநிலங்களை நேற்று தாக்கியது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை கடந்து நேற்று முன் தினம் இரவு முழுதும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை புரட்டிப் போட்டது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, புழுதிப்புயல் வீசியபோது, காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., ஆக இருந்தது. இரவு முழுதும் வீசிய புழுதிப்புயலால் நேற்று காலையில் இருந்தே காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தது.
தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதுமே புழுதி சூழ்ந்திருந்தது. இந்த புழுதிப் புயலின் தாக்கத்தால் நேற்று காலையில் 1,200 மீட்டருக்கு அப்பால் இருப்பதை பார்க்க முடியவில்லை.
இந்த புயல் படிப்படியாக நகர்ந்து மாலையில் நகரத்தை விட்டு கிழக்கு நோக்கி கடந்து சென்றது. அதன் பின் 4,000 மீட்டர் வரையில் பார்க்க முடியும் அளவுக்கு காற்று தெளிவானது. எனினும் புழுதியின் தாக்கம் நீடித்தது.
காற்றின் தரத்தை கண்காணிக்க தேசிய தலைநகரில் நிறுவப்பட்டுள்ள 13 மையங்களிலும் காற்று மோசமான நிலையில் இருப்பதாக பதிவானது.
புழுதிப்புயல் கடந்து சென்ற பின் காற்று மணிக்கு 3 முதல் 7 கி.மீ., வேகத்தில் வீசியது.
புழுதிப் புயலால் மனித உடலில் நீண்டகால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இந்த துகள்கள் நுரையீரலில் ஆழமாகப் படிந்து, நுரையீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று லோக் நாயக் மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.
வெளியே நடமாடும்போது, முகக்கவசம் அணியும்படியும் சுவாச நோய் உள்ளவர்களும் முதியோரும் குழந்தைகளும் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.