தீயா வேலை செய்யணும் குமாரு... கட்சியினருக்கு அமித் ஷா அட்வைஸ்!
தீயா வேலை செய்யணும் குமாரு... கட்சியினருக்கு அமித் ஷா அட்வைஸ்!
ADDED : செப் 25, 2024 06:54 AM

நாக்பூர்; மகாராஷ்டிராவில் பா.ஜ., அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு தொண்டரும் பணியாற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
தேர்தல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெகு விரைவில் அறிவிக்க இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே பா.ஜ., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தையும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகின்றன.
ஆலோசனை
அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விதர்பா பகுதியில் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் துணை முதல்வர் தேவந்திர பட்னவிஸ், பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திட்டங்கள்
கூட்டம் குறித்து அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கும், மக்கள் நலன்களுக்கும் ஏராளமான திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது.
கடமை
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணியை வீழ்த்தி மாநிலத்தை காப்பாற்ற வேண்டும். இது நம் ஒவ்வொரு தொண்டரின் கடமையாகும். இவ்வாறு அமித் ஷா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். விதர்பாவை தொடர்ந்து, சத்ரபதி சாம்பாஜி நகரிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.