லோக்சபாவில் இ-சிகரெட் புகைக்கும் திரிணமுல் காங் எம்பி: பாஜ குற்றச்சாட்டால் பரபரப்பு
லோக்சபாவில் இ-சிகரெட் புகைக்கும் திரிணமுல் காங் எம்பி: பாஜ குற்றச்சாட்டால் பரபரப்பு
ADDED : டிச 11, 2025 01:52 PM

புதுடில்லி: லோக்சபா வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை திரிணமுல் காங்., எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். இதற்கு, ''அத்தகைய அனுமதி இல்லை. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம், வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் குறித்து விவாதம் அனல் பறந்து வருகிறது. இன்றைக்கும் லோக்சபா 11 மணிக்கு கூடியது. விவாத நேரத்தின் போது பாஜ எம்பி அனுராக் தாக்கூர், ''வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை திரிணமுல் காங்., எம்பி ஒருவர் புகைத்து வருகிறார்.
இந்த செயல்பாடு பார்லிமென்ட் ஒழுக்கத்தையும், தேசிய சட்டத்தையும் மீறுவதாகும்'' என குற்றம் சாட்டினார். இதனால் லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: சட்டசபை வளாகத்திற்குள் புகைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கவில்லை. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன். நடத்தை விதிகள் அனைத்து எம்பிக்களுக்கும் ஒரே மாதிரி பொருந்தும்.
எந்தவொரு புகாரும் தீவிரமாக ஆராயப்படும். சபையின் கண்ணியத்தை எம்பிக்கள் பேண வேண்டும். அனைத்து எம்பிக்களும் அரசியலமைப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இது போன்று ஏதேனும் பிரச்னை குறித்து, எம்பிக்களிடம் இருந்து எனது கவனத்திற்கு வந்தால் நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஓம்பிர்லா தெரிவித்தார்.

