இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
UPDATED : ஜூலை 19, 2025 09:06 AM
ADDED : ஜூலை 19, 2025 08:40 AM

புதுடில்லி: 2 முதல்வர்களை கைது செய்ததில் முக்கிய பங்கு வகித்த அமலாக்கத்துறை அதிகாரி ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஆண்டு ஜனவரியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதே போன்று மதுபான கொள்கை முறைகேட்டில் புதுடில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.
இரு முதல்வர்களை அமலாக்கத்துறை கைது செய்த போது, அதற்கான உத்தரவை தயார் செய்து, வழக்கில் முக்கிய பங்கு வகித்தவர் கபில் ராஜ். இரு முதல்வர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இவரின் பெயர் பெரிதாக பேசப்பட்டது.கைது நடவடிக்கைக்கான உத்தரவுகளை தயாரித்து, திறம்பட பணியாற்றியதே அதற்கு காரணம்.
இந்திய வருவாய் பணி அதிகாரியான இவர் தற்போது தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இரண்டு முதல்வர்களை கைது செய்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது மட்டுமல்லாமல், ரூ.13,000 கோடி முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ், அவரது உறவினர் முகுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிரான விசாரணையை நடத்தியவர்.
உ.பி.மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் ராஜ். பி.டெக், பட்டதாரியான இவர், 2009ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியாக பணியை தொடங்கியவர். 8 ஆண்டுகள் அமலாக்கத் துறையில் பணியாற்றி, அண்மையில் தான் சரக்கு மற்றும் சேவைகள் வரி புலனாய்பு பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
கபில் ராஜ் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னமும் 15 ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.