ADDED : செப் 28, 2024 12:14 AM

ஹைதராபாத்: பணமோசடி வழக்கில் தெலுங்கானா வருவாய் துறை அமைச்சர் சீனிவாச ரெட்டி மற்றும் சிலருக்கு சொந்தமான ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அதே கட்சியைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி வருவாய் துறை அமைச்சராக உள்ளார்.
இவரது மகனும், ராகவா குழும இயக்குனருமான ஹர்ஷா ரெட்டி மீது, ஏழு கைக்கடிகாரங்களை 5 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், வருவாய் துறை இயக்குனரகம் ஹர்ஷா ரெட்டி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த கைக்கடிகாரங்களுக்கான பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் ஹவாலா மோசடி வாயிலாக கிடைத்த 100 கோடி ரூபாயில் இருந்து செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது மகன், மகள் உள்ளிட்ட சிலருக்கு சொந்தமாக ஹைதராபாத், கம்மம் உட்பட மாநிலம் முழுதும் உள்ள ஐந்து இடங்களில் டில்லியில் இருந்து வந்த 15 குழுக்களைச் சேர்ந்த அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.