ADDED : ஜன 20, 2025 07:01 AM
பெங்களூரு: அரசு பள்ளிகளின், கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், தாலுகா அளவிலான கல்வி மேம்பாட்டு கமிட்டி அமைத்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக தாலுகா அளவில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ., தலைமையில் கல்வி மேம்பாட்டு கமிட்டி அமைத்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த கமிட்டியில் தாலுகா பஞ்சாயத்து அதிகாரி, மாவட்ட கல்வித்துறை அதிகாரி, செயல் நிர்வாக பொறியாளர், அதிக மாணவர்கள் உள்ள உயர்நிலை, தொடக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பி.யு., கல்லுாரி முதல்வர், ஒரு மூத்த பேராசிரியர் உட்பட பலர் இருப்பர்.
இவர்களை தவிர அரசு அனுமதியுடன் நியமிக்கப்பட்ட, ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்.
மாணவர்களின் வருகை, பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை, கல்வி மேம்பாட்டுக்காக இக்கமிட்டி நடவடிக்கை எடுக்கும்.
சிறார்கள் பள்ளியை பாதியில் விட்டு செல்லாமல், கமிட்டி பார்த்து கொள்ளும். பள்ளியை விட்டு விலகிய சிறார்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர, திட்டங்கள் வகுக்கும்.
பொது பொறுப்பு நிதி மூலம், கல்வி முன்னேற்றத்துக்கு திட்டங்கள் வகுக்கப்படும். இது வரை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், கல்வி மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் நேரம் இல்லாமையால், கூட்டங்கள் நடத்த முடிவதில்லை. இதை மனதில் கொண்டு, கல்வி மேம்பாட்டு கமிட்டியை, கல்வித்துறை அமைத்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.