நடுக்கடலில் வெடித்து சிதறும் கப்பலை நகர்த்தும் பணி தீவிரம்
நடுக்கடலில் வெடித்து சிதறும் கப்பலை நகர்த்தும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 13, 2025 05:12 AM

கொச்சி: கேரள கடலில் தீ விபத்தில் சிக்கி வெடித்து சிதறும் சிங்கப்பூர் கப்பல், கடலில் மூழ்குவதை தடுக்கும் பணியில், கடற்படைக்கு சொந்தமான அவசரகால சேவை கப்பலான 'வாட்டர் லில்லி' ஈடுபட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்புவில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, 'வாங் ஹை 506' என்ற சரக்கு கப்பல் சமீபத்தில் பயணித்தது.
ரசாயன பொருட்கள்
சிங்கப்பூருக்கு சொந்த மான இந்த கப்பலில் 150க்கும் மேற்பட்ட 'கன்டெய்னர்'களில் பலவிதமான ரசாயன பொருட்கள் இருந்தன.
கடந்த 9ம் தேதி, கேரள கடற்பகுதியான கண்ணுார் அழிக்கால் துறைமுகத்தில் இருந்து 44 நாட்டிகல் மைல் தொலைவில் பயணித்தபோது, இந்த கப்பலில் இருந்த கன்டெய்னரில் தீப்பிடித்தது. பின், அந்த தீ கப்பல் முழுதும் பரவி கன்டெய்னர்கள் வெடித்து சிதறின. இதனால், கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 22 பேரும் கடலில் குதித்தனர்.
இதில், 18 பேர் மீட்கப்பட்டு கர்நாடகாவின் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடலில் மூழ்கி மாயமான நான்கு பேரை தேடும் பணி தொடர்கிறது.
விபத்தில் சிக்கிய கப்பலில், 'ட்ரைக்ளோரோபென்சீன், ட்ரை எத்திலின், டெட்ராமைன், பென்ஸோபினோன், நைட்ரோ செல்லுலோஸ்', தீப்பிடிக்கும் தன்மைகொண்ட பிசின், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்றவை டன் கணக்கில் உள்ளதால் மூன்று நாட்களுக்கு மேலாக கப்பல் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இரவு பகலாக கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம், பாரம் தாங்காமல், கப்பல் கடலில் ஒரு பக்கமாக சாய்ந்து வருவதால், கப்பல் மூழ்காமல் இருப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
'சால்வேஜ் மாஸ்டர்'
கடலோர காவல்படைக்கு சொந்தமான அவசரகால சேவைக்கு பயன்படுத்தப்படும் 'வாட்டர் லில்லி' கப்பல் வாயிலாக இந்தப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பலகட்ட முயற்சிக்குப் பின் வாட்டர் லில்லி இழுவை கப்பல் வாயிலாக, சிங்கப்பூர் கப்பலை நகர்த்தும் பணி நேற்று துவங்கியது.
இதுகுறித்து கடலோர காவல்படை மூத்த அதிகாரி கூறுகையில், 'சிங்கப்பூர் கப்பலில் 40 சதவீதம் தீ அணைக்கப்பட்டது. ரசாயனங்கள் அதிகம் உள்ளதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
'அதேசமயம், கடலில் ஒரு பக்கமாக சாயும் கப்பலை, நிமிர்த்தும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. மீட்புப் பணியில் பயன்படுத்தப்படும் 'சால்வேஜ் மாஸ்டர்' கப்பலில் இருந்த மீட்புக் குழுவினர், சிங்கப்பூர் கப்பலை அடைந்தனர்' என்றார்.
கப்பலில் தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர கடலோர காவல்படையினர் முடிவு செய்துள்ளனர்.