எல் நினோ தாக்கம்; 1901க்கு பின் அக்டோபரில் பகல் நேர சராசரி வெப்பநிலை அதிகளவு பதிவு
எல் நினோ தாக்கம்; 1901க்கு பின் அக்டோபரில் பகல் நேர சராசரி வெப்பநிலை அதிகளவு பதிவு
ADDED : நவ 01, 2026 08:47 PM

-நமது சிறப்பு நிருபர்-
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல்நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் இயற்கையான பருவநிலை நிகழ்வு, 'எல் நினோ' எனப்படுகிறது. இதன் வலுவான தாக்கத்தால், நம் நாட்டிலும் பகல், இரவு நேர வெப்பநிலை அக்டோபரில் இயல்பை விட அதிகமாக இருந்ததாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது, 1901க்கு பின், அக்., சராசரி வெப்பநிலையில் புதிய உச்சம் என்றும், நவம்பரிலும் இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறியதாவது:
கடந்த 2001க்கு பின், நாட்டில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்ச மற்றும் சராசரி வெப்பநிலைகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்ததற்கு வலுவான எல் நினோவும் முக்கிய காரணம்.
தற்போது, மிகவும் வலுவான எல் நினோ நிலவுகிறது. நவம்பரில் அதன் தாக்கம் மேலும் அதிகரித்து உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் படிப்படியாக குறைய தொடங்கினாலும், அடுத்த ஆண்டு வசந்த காலம் வரை எல் நினோ தாக்கம் நீடிக்கும்.
பொதுவாக, எல் நினோ ஆண்டுகளில் புயல்கள் உருவாவது குறைவாக இருக்கும். உருவாகும் புயல்களின் தீவிரமும் குறைவாகவே இருக்கும். அவை பெரும்பாலும் ஆந்திரா, தமிழகம் கடலோரப் பகுதிகளையும், சில நேரங்களில் இலங்கையையும் பாதிக்கும். இந்த ஆண்டும் இதுவரை இரண்டு புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
