முதிய தம்பதி டாக்டர்களிடம் ரூ.14.85 கோடி மோசடி: ரூ.1.9 கோடியை முடக்கியது டில்லி போலீஸ்
முதிய தம்பதி டாக்டர்களிடம் ரூ.14.85 கோடி மோசடி: ரூ.1.9 கோடியை முடக்கியது டில்லி போலீஸ்
ADDED : ஜன 13, 2026 07:58 PM

புதுடில்லி: சைபர் கிரைம் மோடியாளர்களால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு,ரூ.14.85 கோடி இழந்த என்ஆர்ஐயான முதிய தம்பதி டாக்டர்களின் பணத்தில் ரூ.1.9 கோடியை டில்லி போஸ் அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
டில்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற டாக்டர்கள் ஓம் தனேஜா 81, இந்திரா தனேஜா 77, இருவரும் ஐ.நா.வில், 48 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, 2015-ல் இந்தியா திரும்பியவர்கள். இந்நிலையில் இந்த முதிய தம்பதியரிடம், சைபர் கிரைம் மோசடியாளர்கள் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் ஜனவரி 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கும் மேலாக, வீடியோ கால் மூலம் மிரட்டப்பட்டு, வீட்டிலேயே டிஜிட்டல் கைது செய்தனர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மும்பை போலீஸ் அதிகாரிகள் போல நடித்த அந்த மோசடி கும்பல், தம்பதியினரின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்கள் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகக் கூறி பயமுறுத்தியுள்ளது.இதனால் பயந்துபோன தம்பதியினர், தங்கள் வாழ்நாள் சேமிப்பு மற்றும் பரஸ்பர நிதி ஆகியவற்றை விற்று மொத்தம் 8 தவணைகளாக சுமார் ரூ. 14.85 கோடியை மோசடியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.
அதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 10 அன்று 'விடுதலை ஆணை' வாங்க போலீஸ் நிலையத்திற்கு வருமாறு மோசடியாளர்கள் கூறியபோதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை தம்பதியினர் உணர்ந்தனர்.
பின்னர் டில்லி போலீஸ் சைபர் பிரிவில் புகார் அளித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,இந்தப் பணம் இந்தியா முழுவதும் உள்ள 700-க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. தற்போது வரை ரூ. 1.9 கோடி மீட்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அல்லது எந்த அரசு அமைப்பும் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் கைது செய்யாது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

