ADDED : டிச 19, 2024 10:46 PM
சப்தர்ஜங் என்கிளேவ்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் தப்பிய வயதான தம்பதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர்.
தெற்கு டில்லியின் சப்தர்ஜங் என்கிளேவில் தன் 78 வயதான மனைவி ஷீலாவுடன் கோவிந்த் ராம் நாக்பால், 80, வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோவிந்த் ராமின் மகன், அமெரிக்காவில் வேலை செய்கிறார்.
இந்த தம்பதியின் மகள், திருமணம் ஆகி டில்லியின் வேறு பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
புதன்கிழமை அதிகாலை இவர்கள் வீட்டில் இருந்து புகை வெளியேறியது. இதை அந்த வழியே நடைப்பயிற்சிக்குச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து, போலீசுக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தம்பதியை மீட்டனர். அவர்களுக்கு தீ விபத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டும் வழியில் அவர்கள் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடும் குளிரால் ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தம்பதி, கடந்த சில நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ளனர்.
தீ விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி, வயோதிகம் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.