தேர்தல் கமிஷன் இணையதளம் மீது தேர்தல் நேரத்தில் 68 லட்சம் முறை சைபர் தாக்குதல்
தேர்தல் கமிஷன் இணையதளம் மீது தேர்தல் நேரத்தில் 68 லட்சம் முறை சைபர் தாக்குதல்
ADDED : மே 08, 2026 02:08 AM

புதுடில்லி : தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது, தேர்தல் கமிஷனின் இணையதளம் மீது 68 லட்சம் முறை சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியாகின. இதில், மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டன.
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: இந்த தேர்தலில் எங்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான, 'இசிஐநெட்' பங்களிப்பு அபரிமிதமானது. இதன் மூலம் தேர்தல் நடைமுறைகள் சுமுகமாகவும் வேகமாகவும் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள், வன்முறைகள் ஏதுமின்றி, தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. அத்துடன் அனைத்து மாநிலங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவும் உயர்ந்தது.
அதே சமயம் தேர்தல் நேரத்தில், 'இசிஐநெட்' இணையதளம் மீது சைபர் தாக்குதல்கள் நடந்தன. 68 லட்சம் முறை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களை தேர்தல் கமிஷன் தொழில்நுட்ப குழு சிறப்பாக கையாண்டு முறியடித்தது.
குறிப்பாக ஓட்டு எண்ணிக்கை நாளன்று, சைபர் தாக்குதல் அதிக அளவில் இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
