ADDED : பிப் 14, 2024 05:53 AM
புனே : தேசியவாத காங்., கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித் பவார் தரப்புக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளதை, சரத் பவார் கடுமையாக கண்டித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ், கடந்த ஜூலையில் இரண்டாக பிளவுபட்டது.
அவரது அண்ணன் மகனான அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆளும் பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் இணைந்தார்.
அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்தை தனக்கு வழங்கக் கோரி, தலைமை தேர்தல் கமிஷனில் அவர் மனு தாக்கல் செய்தார். சரத் பவார் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், கட்சி மற்றும் அதன் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என கடந்த 6ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, சரத் பவாரின் கட்சி, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரில் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புனேவில் ஒரு நிகழ்ச்சியில் சரத் பவார் கூறுகையில், “கட்சி மற்றும் சின்னத்தை அதன் நிறுவனர் கைககளில் இருந்து பறித்து, மற்றவர்களுக்கு வழங்கிய தேர்தல் கமிஷனின் முடிவு ஆச்சர்யம் அளிக்கிறது.
''இதுபோன்ற நிலை நாட்டில் ஒருபோதும் நடந்ததில்லை. இந்த முடிவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். சின்னத்தை விட, எண்ணங்களும், சித்தாந்தமும் தான் முக்கியம்,” என்றார்.

