ADDED : மார் 17, 2024 11:25 PM

லோக்சபாவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்., 19ல் துவங்கி, ஜூன், 1ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
கடந்த, 2004ம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது, தேர்தல் நடக்கும் காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டில், 44 நாட்களுக்கு நடக்க உள்ளது. இந்த கோடைக்காலம் மிகவும் கடுமையாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோடை வெயிலுடன், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரமும் தகிக்க வைக்க உள்ளது.
கடந்த, 1998ம் ஆண்டில், ஐ.கே. குஜ்ரால் அரசு பதவியிழந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடந்தது. அப்போது, 13 நாட்களில் தேர்தல் முடிக்கப்பட்டது.
வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்ததால், 1999ல் செப்., - அக்., மாதங்களில், 29 நாட்களுக்குள் தேர்தல் நடந்தது.
இதன்பின், 2004ல், பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்கள் இருக்கையில், பிரதமராக இருந்த வாஜ்பாய், தேர்தலை முன்னதாகவே சந்தித்தார். அதன்படி, 2004ம் ஆண்டில் நான்கு கட்டங்களாக, 21 நாட்களில் தேர்தல் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தேர்தல்கள் கோடைகாலத்துக்கு மாறியது. கடந்த, 2009ல் ஐந்து கட்டங்களாக, 28 நாட்களிலும், 2014ல் ஒன்பது கட்டங்களாக, 36 நாட்களும் நடந்தது. இதைத் தொடர்ந்து, 2019ல் ஏழு கட்டங்களாக, 39 நாட்கள் தேர்தல் நடந்தது.

