தேர்தல் ரகசியங்களும் அதிகாரியின் ராஜ விசுவாசமும்; ஆணையத்தில் நடந்த கூத்து!
தேர்தல் ரகசியங்களும் அதிகாரியின் ராஜ விசுவாசமும்; ஆணையத்தில் நடந்த கூத்து!
UPDATED : பிப் 09, 2026 01:42 PM
ADDED : ஜன 15, 2026 06:57 AM

'இப்படி கூட நடக்குமா' என நீங்கள் கேட்கலாம். நடந்ததால்தானே இதை எழுதுகிறேன். அப்போது இருந்த தலைமை தேர்தல் ஆணையர் நம்ம ஊர்க்காரர். நல்ல மனிதர். விஷயம் தெரிந்தவர். திறமையான ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். இதற்கெல்லாம் மேலாக, யாரைப் பார்த்தும் பயப்பட மாட்டார்.
'சொன்ன வேலையைச் செய்யலேன்னா தேவையில்லாத டிபார்ட்மெண்டிற்கு தூக்கி அடிப்பான்... இதைத் தாண்டி அவனால் என்ன செய்துவிட முடியும்' என்பார் அவர். 'என்ன சார் அவன் இவன் என சொல்கிறீர்களே' என்றால், 'அவன் பண்ற வேலைக்கு வேறு எப்படி கூப்பிடுவது' என பதில் வரும்.
கட்சிக்காக வேலை செய்த கமிஷனர்
தேர்தல் ஆணையத்தில் மூன்று ஆணையர்கள். அதில் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பர். இந்த மூன்றில் ஒரு தேர்தல் ஆணையராக அவரை நியமித்தபோதே பல கேள்விகள் எழுந்தன. இந்த நபரா? காங்கிரஸ் தொண்டர்களை காட்டிலும், அந்த கட்சிக்கு அதிவிசுவாசமாக வேலை செய்யும் அதிகாரி என பெயர் வாங்கியவர். 'தேர்தல் ஆணையத்திற்கு வருவதற்கு முன், எப்படியோ இருந்திருப்பார். தேர்தல் ஆணையர் நாற்காலியில் உட்கார்ந்து விட்டால் நியாயமாகத்தான் அவரும் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்' என பலரும் நினைத்தனர். ஆனால் அந்த அதிகாரியின் நிறம் மாறவில்லை.
பாத் ரூமில் நடப்பது என்ன?
ஆணையத்தின் கூட்டம் அலுவலத்தில் உள்ள நான்காவது மாடியில் நடைபெறும். ஒவ்வொரு முறையும் கூட்டம் முடிந்தபிறகு ஆணையர்கள் மூவரும் ஒன்றாக லிப்ட் மூலமாக வேறு வேறு தளங்களில் உள்ள அவர்களது அறைகளுக்குச் செல்வர். இப்படி கூட்டம் முடிந்து லிப்டிற்காக மூவரும் காத்திருக்கும் போது அந்த ஆணையர், 'நீங்கள் செல்லுங்கள், நான் வாஷ் ரூம் வரை போய் வருகிறேன்' என, சென்று விடுவாராம். உடனே இன்னொரு ஆணையர், 'தலைமை தேர்தல் ஆணையரிடம், சார் அவர் எங்கே போகிறார் தெரியுமா' என கேட்டாராம். 'ஏம்பா, வாஷ் ரூம் என சொல்லிவிட்டுப் போனவர் வேறு எங்கே போவார்' என சிரித்துக் கொண்டே கேட்க, 'சார், நீங்க தப்பா நினைக்கிறீங்க, அவர் வாஷ் ரூமிற்கு போனது வேறு வேலைக்கு' என்றாராம் அந்த ஆணையர்.
அதென்ன வேற வேலை?
வாஷ் ரூமிற்கு போய் அந்த கட்சியின் முக்கிய தலைவருக்கு போன் செய்து, 'ஆணையத்தில் என்ன பேசப்பட்டது, என்ன முடிவெடுத்தோம் என்பதை போன் செய்து சொல்வார். அதற்குத்தான் அவர் அங்கு போனது' என்றாராம் அந்த ஆணையர்.'அப்படியா' என அதிர்ச்சியடைந்த தலைமை கமிஷனர், 'அதற்கு எதுக்கு வாஷ் ரூம் போகனும், அவருடைய அறைக்குப் போயே போன் செய்திருக்கலாமே...?' என்று கேட்டிருக்கிறார். 'உடனுக்குடன் டிவி ப்ளாஷ் போல செய்திகளை அங்கு சொல்ல வேண்டுமே, அதற்குத்தான் இந்த வாஷ் ரூம்' என பதில் சொன்னாராம் அந்த தேர்தல் ஆணையர்.
அரசுக்கு செய்த பெரிய உதவி
லோக்சபா பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட ஆணையம் தயாரக இருந்தது. அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிப்பை செய்ய வேண்டியதுதான். ஆனால் பிரச்னைக்குரிய அந்த தேர்தல் ஆணையர் திடீரென விடுப்பில் சென்று விட்டார். 'சரி வந்துவிடுவார்' என நினைத்தால் அவர் விடுப்பிலிருந்து வருகிற மாதிரி தெரியவில்லை. தேர்தல் அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க ஏன் இவர் விடுமுறையில் சென்றார்? இதற்கிடையே அப்போதிருந்த பிரதமர் பலவித நலத்திட்டங்களை தினமும் அறிவித்துக் கொண்டிருந்தார். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இப்படி பிரதமர் செய்ய முடியாது. காரணம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். வெறுத்துப் போன தலைமை தேர்தல் ஆணையர், குறிப்பிட்ட அந்த ஆணையர் இல்லாமலேயே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிடலாமா என யோசித்தார்.
எத்தனை நாள்தான் பொறுக்க முடியும்? இறுதியில் அந்த ஆணையர் வந்து சேர்ந்தார். லோக்சபா தேர்தல் அறிவிப்பும் வெளியானது. அதற்குள் அப்போதிருந்த அரசு பல திட்டங்களையும் அறிவித்துவிட்டது. ஆனால் அப்போதிருந்த ஆளும் கட்சிக்கு தேர்தல் தேதிகள் ஏற்கெனவே தெரியும். உபயம்,- இந்த சர்ச்சைக்குரிய கட்சிக்கார தேர்தல் ஆணையர்தான்!
உன்னை விட மாட்டேன்
தேர்தல் அறிவிப்பை வெளியிட ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. நானும் சென்றிருந்தேன். அறிவிப்பிற்கு முன்பாக நான் பணியாற்றிய என்.டி.டி.வி இந்த அறிவிப்பு குறித்து என்னிடம் போன் மூலமாக கேள்வி கேட்டனர். இதை எங்கள் பாஷையில் phono என்போம். அதாவது டிவியில் செய்தி படிப்பவர், தேர்தல் குறித்து கேள்வி கேட்பார். அதற்கு நான் பதில் சொல்வேன்.
காமிரா முன்னால் லைவ் செய்யலாமே என கேட்கலாம். பத்திரிகையாளர் சந்திப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் காமிரா முன் நின்று லைவ் செய்ய முடியாது. காரணம் காமிரா வேறொரு இடத்தில் இருக்கும். நாம் அங்கு செல்வதற்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பு ஆரம்பித்துவிடும். எனவேதான் இந்த phono.
இந்த தேர்தல் அறிவிப்பு மிகவும் கால தாமதமாகிவிட்டதாக சொல்லப்படுகிறதே? என்ன காரணம்? என என்னிடம் கேள்வி கேட்டார், ஸ்டூடியாவிலிருந்து செய்தி படிக்கும் இளம்பெண். 'உண்மைதான். சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு தேர்தல் ஆணையர் விடுப்பில் சென்றுவிட்டார். அதனால்தான் லேட். இந்த இடைவெளியில் மத்திய அரசு பல நலத்திட்டங்களை அறிவித்துவிட்டது. தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு விதிமுறைகள் அமலுக்கு வருவதால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது என்பதால் இப்போது அதை செய்து முடித்துவிட்டது' என போன் பேட்டியில் சொன்னேன்.
நான் சொன்னது ஏதோ நான் கண்டுபிடித்த புதிய விஷயம் அல்ல. ஏற்கெனவே ஒரு சில பத்திரிகைகளில் வெளியான செய்திதான். நான் கொஞ்சம் விலாவாரியாக சொல்லிவிட்டேன். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் என் மொபைல்போன் சிணுங்கியது.எந்த தேர்தல் ஆணையரைப் பற்றி நான் டிவியில் சொன்னேனோ, அவர்தான். “என்ன தைரியம் உனக்கு, என்னைப் பற்றி எப்படி நீ டிவியில் அப்படி சொல்லலாம்” அவர் குரலில் கோபம் தெறித்தது.
“நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. ஏற்கெனவே மீடியாவில் வெளியான விஷயத்தைத்தான் சொன்னேன்,” என்றேன், நான்.“உன்னை விடப்போவதில்லை. உன் மேல் அவதூறு வழக்கு தொடருவேன். உன் டிவி ஓனரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் செய்தி ஒலிபரப்பு துறை செயலராக இருந்த போது உங்கள் டிவிக்கு நிறைய உதவியிருக்கிறேன். நானும் உன் டிவி ஓனரும் நண்பர்கள். உன்னை என்ன செய்கிறேன் பார்,” மிரட்டலோடு போனை வைத்துவிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு வழியாக முடிந்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அலுவலகத்திலிருந்து போன். உங்களை மேடம் சந்திக்க விரும்புகிறார். மேடம் என்பது எங்கள் டிவியின் பொறுப்பாளர். மிகவும் அன்பாக பழகக் கூடியவர். என் மீது தனி மரியாதை கொண்டவர்.
மேலே படிக்கும் முன் பொதுவாக தினசரி மற்றும் டிவி செனல்கள் நிருபர்களின் பொறுப்பு பற்றி சிலவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நிருபர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும். ஒருவர் காங்கிரஸ் கட்சியை கவனித்துக் கொள்வார். ஒருவர் பாஜக. இந்த கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து இவர்கள் செய்தி சேகரிக்க வேண்டும்.
இதை பீட் என அழைப்பார்கள். நிருபர்கள் அவர்களுடைய “பீட்”டில் செய்தி மிஸ் செய்தால் செய்தி ஆசிரியரிடம் விளக்கம் தர வேண்டியிருக்கும். அதே போல மத்திய அரசின் துறைகளும் நிருபர்களுக்கு ஒதுக்கப்படும். இது குறித்த செய்திகளுக்கு இந்த நிருபர்கள் பொறுப்பு.
உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தினமும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். அங்கு நடைபெறும் வழக்குகளை கவனித்து செய்தி அனுப்ப வேண்டும். அதே போல தேர்தல் ஆணையத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நான் கண்காணிக்க வேண்டும்.
அலுவலகத்திற்கு சென்ற உடன் சேனலின் பொறுப்பாளரை சந்தித்தேன். வழக்கமான உரையாடல்களுக்குப் பிறகு அவர் சொன்னார், “வைத்யா (இப்படித்தான் என்னை அலுவலகத்தில் அனைவரும் கூப்பிடுவர்) அந்த தேர்தல் ஆணையர் பற்றி நீ இப்படி போன் பேட்டியில் சொல்லியிருக்க வேண்டாம்” என்றார், பொறுப்பாளர்.
“நடந்ததைத்தான் சொன்னேன். தவிர, இது ஏற்கெனவே மீடியாவில் வந்ததுதான்” என்றேன், நான். “இருந்தாலும் நீ அப்படி சொல்லியிருக்கக் கூடாது,” என்றார், அவர். நான் பதில் பேசவில்லை. அடுத்து அவர், “சரி வைத்யா…நீ தேர்தல் ஆணையத்தை இனிமேல் பார்க்க வேண்டாம்,” என்று கூறி விட்டார். எல்லாம் அந்த ஆணையரின் வேலை என புரிந்து கொண்டேன்.பதில் சொல்லாமல் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினேன்.
திரும்பி வந்தது!
இப்போதெல்லாம் செய்தி சேகரிப்பது மிகவும் சுலபமாகிவிட்டது. ஒவ்வொரு துறையிலும் உள்ள செய்தி தொடர்பாளர் ஒரு வாட்ஸ் அப் குரூப் உண்டாக்குவார். அந்த துறையை கவர் செய்யும் நிருபர்கள் இந்த குரூப்பில் இருப்பர். எந்த செய்தியாக இருந்தாலும் உடனே இந்த குரூப்பில் பகிர்ந்து கொள்வார் அந்த துறையில் செய்தி தொடர்பாளர். இன்னொரு பக்கம் ட்விட்டரிலும் சம்பந்தப்பட்ட அரசு துறையே செய்தியை வெளியிட்டுவிடும். தேர்தல் ஆணையத்திலும் இப்படி ஒரு வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதன் மூலமாக செய்திகள் பகிரப்படுகின்றன.
ஆனால் நான் குறிப்பிடும் காலத்தில் இப்படி வாட்ஸ்அப் குரூப் கிடையாது. தினமும் தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரைப் போய் பார்க்க வேண்டும், செய்திகளுக்காக. ஏதாவது முக்கிய செய்தி இருந்தால் சாஸ்திரி பவனில் உள்ள அவருடைய அலுவலகத்திற்கு எங்களையெல்லாம் அழைத்து செய்திகளைச் சொல்வார். இதைத் தாண்டி செய்தி வேண்டுமானால் தலைமைத் தேர்தல் ஆணையர், மற்ற ஆனையர்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது துணை தேர்தல் ஆணையர்களை தெரிந்திருக்க வேண்டும்.
இவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள். யாருடனும் அதிகம் பேச மாட்டார்கள். பல்லாண்டுகளாக இந்த 'பீட்' என் பொறுப்பில் இருந்ததால் ஆணையத்தின் வாசலில் இருக்கும் செக்யூரிட்டி முதல் முக்கிய அதிகாரிகளின் பியூன் வரை அனைவருடனும் நல்ல பழக்கம்.
தலைமை தேர்தல் ஆணையர் முதல் துணை ஆணையர் வரை அனைவருடனும் போனில் பேசுவேன். இப்படித்தான் பல எக்ஸ்குளூசிவ் செய்திகளை என்.டி.டி.வி.,யில் ப்ரேக் செய்திருக்கிறேன். எனக்கு பதிலாக தேர்தல் பீட் என் நண்பர் சித்தார்த் பாண்டேவிடம் ஒப்படைக்கப்பட்டது. நானும் பாண்டேவும் ஒரே சமயத்தில் என்.டி.டி.வி.,யில் சேர்ந்தோம். நல்ல நண்பர். ஆனால் அவருக்கு ஆணையத்தில் யாரையும் தெரியாது.
“சார் எனக்கு யாரையும் தெரியாது. எதற்கு எனக்கு இந்த பீட் கொடுத்தார்கள் என புரியவில்லை. நீங்கதான் உதவ வேண்டும்,” என கேட்டுக் கொண்டார் பாண்டே. 'கவலைப்படாதே' என பதில் சொன்னதோடு இல்லாமல், எனக்கு கிடைத்த அனைத்து செய்திகளையும் அவருக்கு கொடுக்க, அவர் அலுவலகத்திற்கு அனுப்பினார். ஆனால் பல சமயம் ஸ்டூடியோவிலிருந்து எனக்கு போன் செய்து தேர்தல் குறித்த செய்திகளுக்கு phono கேட்பார்கள். பாண்டேவிற்கு வேறு சில பீட்களும் இருந்ததால் ஆணையத்தை அவரால் கவனிக்க முடியவில்லை. இரண்டே மாதங்களில் மீண்டும் தேர்தல் ஆணையம் பீட் எனக்கு வந்து சேர்ந்தது.
சர்ச்சைக்குரிய ஆணையரைப் பற்றி...
என்னை தேர்தல் ஆணையம் பீட்டிலிருந்து விலக்கிய அந்த ஆணையர் ஒரு மாநிலத்தின் தலைமை செயலராக சில காலம் இருந்தார். அந்த மாநில முதல்வர் என்னிடம் ஒரு முறை சொன்னார். “ ஒரு புராதன பெயின்டிங் எங்க ஊரில் இருந்தது. கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தது. அதை டில்லி எடுத்துக் கொண்டு போய் சரி செய்து கொண்டு வருகிறேன் என என்னிடம் கேட்டார் அந்த அதிகாரி. ''நாளை சொல்கிறேன் என அவரிடம் சொல்லிவிட்டேன்.
பிறகு என் நண்பர் சொன்னார். அந்த ஆளிடம் எதையும் கொடுக்க வேண்டாம். சரி செய்து வருகிறேன் என சொல்லி இங்கிருந்து கொண்டு போனதை வெளிநாட்டுக்கு விற்று விடுவார், நமக்கு டூப்ளிகேட்டை கொடுத்து ஏமாற்றிவிடுவார். இப்படி ஏற்கனவே நடந்துள்ளது என எச்சரிக்கை செய்தார் நண்பர். மறு நாள் அந்த அதிகாரியின் முடியாது என சொல்லிவிட்டேன்,” என்றார், அந்த முதல்வர்.
இப்படிப்பட்டவர்தான் அந்த தேர்தல் ஆணையர். இவர் தலைமை தேர்தல் ஆணையராகி ஓய்வும் பெற்றுவிட்டார். அந்த பாரம்பரிய கட்சி தலைமைக்கு தன் கடைசி காலம் வரை நெருக்கமாகத்தான் இருந்தார். அந்த நெருக்கத்திற்கு காரணம்-, அவரது மனைவியும் அந்த கட்சி தலைவியும், ஏதோ ஒரு கோர்ஸ் ஒன்றாக டில்லியில் படித்தார்களாம்!
- அ.வைத்தியநாதன்

