ADDED : ஜன 09, 2025 10:08 PM
சாணக்யாபுரி:டில்லி சட்டசபை தேர்தலுக்கு வகுக்க வேண்டிய வியூகம் குறித்து மாநில நிர்வாகிகளுக்கு கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விளக்கினார்.
டில்லி சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் பா.ஜ., இதுவரை 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள 41 இடங்களுக்கான டிக்கெட்டுகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த பட்டியலில் கூடுதலாக பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தேர்தல் வியூகம் குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ஜ., தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா நேற்று டில்லி பிரிவின் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மாநில தேர்தல் குழு மற்றும் பிற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் நிர்வாகக் கூட்டத்தில், தலைவர்களுக்கு ஜே.பி.நட்டா அறிவுரை வழங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. “வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் யாரோ ஒருவரின் செல்வாக்கின் கீழ் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடும் தவறை செய்ய வேண்டாம். இதனால் கட்சிக்கும் உங்களுக்கும் பலன் இல்லை. ஒற்றுமையாக போராட வேண்டும்,” என, நட்டா அறிவுரை வழங்கினார்.
அப்போது மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

