மின்சார சட்டத்தை திருத்த திட்டம் தொழிற்சாலை கட்டணம் குறையும்
மின்சார சட்டத்தை திருத்த திட்டம் தொழிற்சாலை கட்டணம் குறையும்
ADDED : அக் 12, 2025 11:04 PM

புதுடில்லி:தொழிற்சாலைகளின் மின் கட்டணங்களை சீரமைக்கும் வகையில், மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மின்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு அதிகமாக உள்ள மின்கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், ரயில்வே சிஸ்டம்கள், உற்பத்தி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும் வகையிலும், மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 6.90 லட்சம் கோடி ரூபாய், நஷ்டத்தை சந்தித்து வரும் மின்சார வினியோக நிறுவனங்களின் பிரச்னைகளை சரிசெய்வது, அதிக மின் கட்டணத்தால், தொழில் போட்டி, தடைபடும் பொருளாதார வளர்ச்சி, துாய எரிபொருளுக்கு மாற தாமதம் ஆகிய பாதிப்புகளை சந்திப்பதில் இருந்து தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவவும், சீர்திருத்தங்களை அரசு பரிசீலித்து வருகிறது.
வரைவு மசோதாவின்படி, மின்சார கட்டணத்தை, தன்னிச்சையாக மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் நிர்ணயிக்க அதிகாரம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மின்சார திருத்த மசோதா 2025ன் வரைவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.