பழங்குடியினர் வீடுகளுக்கு விரைவில் மின்சாரம்! அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உறுதி
பழங்குடியினர் வீடுகளுக்கு விரைவில் மின்சாரம்! அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உறுதி
ADDED : ஜூலை 10, 2025 08:45 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுப்பரியாரம் ஊராட்சிக்குட்பட்ட முல்லக்கரை பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் மின் கட்டணம் செலுத்த தவறியதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, மக்களிடம் குறை கேட்டார். அதன்பின், அவர் கூறியதாவது:
முல்லக்கரை பழங்குடியினர் குடியிருப்புப் பகுதியில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மின்வினியோகம் வழங்கவும், இதுவரை இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், 27ம் தேதிக்குள் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு, 'கேரள ஹைடல்' சுற்றுலா அமைப்பின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்.,) 5.57 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட கலெக்டர் சார்பாக, மாவட்ட பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு அதிகாரி ஷமீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில், 3,05,974 லட்சம் ரூபாய் நிலுவை மின்கட்டணம் செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும். மீதி உள்ள 2,51,647 லட்சம் ரூபாய் சேதமடைந்த வீடுகளின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.
அமைச்சருடன், எம்.எல்.ஏ., பிரபாகரன், புதுப்பரியாரம் ஊராட்சி தலைவர் பிந்து, செயலாளர் காஞ்சனா, மின்வாரிய அதிகாரிகள் இருந்தனர்.

