ADDED : பிப் 08, 2025 01:41 AM

பாலக்காடுகேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கூற்ற நாடு அருகே ஆண்டு தோறும் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், 'நேர்ச்சை' என்ற பெயரில் உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, அணிவகுப்புக்காக, 47 யானைகள் வந்திருந்தன. அணிவகுப்பு முடிந்து திரும்பிச் செல்லும் போது, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'வள்ளம்குளங்கரை நாராயணன்குட்டி' என்ற யானை திடீரென மிரண்டு, கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த பாகன் குஞ்சுமோன், 50, என்பவரை, காலால் மிதித்தும், தந்தத்தால் குத்தியும் தாக்கியது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தின்போது, யானை மீது இருந்த இருவர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.