தனியார் தர்பார் நிகழ்ச்சிக்கு பட்டத்து யானை தேர்வு மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் மும்முரம்
தனியார் தர்பார் நிகழ்ச்சிக்கு பட்டத்து யானை தேர்வு மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் மும்முரம்
ADDED : செப் 24, 2024 07:28 AM

மைசூரு: தனியார் தர்பார் நிகழ்ச்சிக்காக பட்டத்து யானையாக 'கஞ்சன்', துணை யானையாக 'பீமன்' தேர்வு செய்யப்பட்டன.
மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 19 தசரா துணை கமிட்டிகளும், தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.
மைசூரு தசராவில் பங்கேற்க 14 யானைகள் வந்துள்ளன. தினமும் யானைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு தசராவை காண, கூடுதலாக சுற்றுலா பயணியர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரியை பார்க்க கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, அரண்மனை வளாகத்தில் பார்வையாளர் பகுதியில் நாற்காலிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வழக்கமாக, இங்கு பார்வையாளர் பகுதியில், 20,000 முதல் 25,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருக்கும்.
இம்முறை 500 மீட்டர் நீளத்துக்கு கூடுதலாக பார்வையாளர் பகுதியை விரிவுபடுத்தி, 10,000 முதல் 15,000 கூடுதல் இருக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மஹாதேவப்பா, அரண்மனை வளாகத்தை பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது:
ஜம்பு சவாரியை பார்க்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிகிறது. டிக்கெட், பாஸ் வைத்திருக்கும் பலரும், இருக்கை கிடைக்காமல், நின்றபடி பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், அரண்மனை வளாகத்தில், கூடுதலாக 15,000 பேர் பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். இதனால் 35,000 முதல் 45,000 பேர் வரை பார்த்து ரசிக்க இருக்கை ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரீல்சுக்கு தடை
மைசூரு அரண்மனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சன், தனஞ்செயா ஆகிய இரு யானைகள் சண்டை போட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, வனத்துறை துணை தலைமைச் செயருக்கு, துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே எழுதியுள்ள கடிதம்:
தசரா விழாவில் பங்கேற்க, பல முகாம்களிலிருந்து யானைகள் நகருக்கு வந்துள்ளன.
அரண்மனை வளாகத்தில் கட்டடப்பட்டு உள்ள யானைகள் அருகில் நின்று போட்டோ எடுப்பது, ரீல்ஸ் செய்ய, அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகாமுக்கு திரும்பிச் செல்லும் வரை, அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தசரா யானைகள் முன் போட்டோ, ரீல்ஸ் எடுக்க அனுமதிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தசராவின்போது, மன்னர் குடும்பம் சார்பில் தனியார் தர்பார் நடக்கும். அப்போது தங்க சிம்மாசனத்தில், யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் அமர்ந்து, தர்பார் நடத்துவார். அப்போது யானை, ஒட்டகம், மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்படும்.
நடப்பாண்டு அரண்மனையில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்காக யானையை தேர்வு செய்ய, பீமா, கஞ்சன், சுக்ரீவன், கோபி, ஏகலைவா, லட்சுமி, ஹிரண்யா ஆகிய யானைகள், அரண்மனை கண்ணாடித் தொட்டி அருகில் அழைத்து வரப்பட்டன.
அங்கு வந்த யதுவீரின் தாய் பிரமோதா தேவி, பேரன் ஆத்யவீர் நரசிம்மராஜ உடையார் ஆகியோர் கஞ்சன் பட்டத்து யானையாகவும்; பீமன் துணை யானையாகவும் தேர்வு செய்தனர். பின்னர், அனைத்து யானைகளுக்கும் கரும்புகள்வழங்கினர்.
24_DMR_0006, 24_DMR_0007
பட்டத்து யானைகளை தேர்வு செய்து, பிரமோதா தேவி, அவரது பேரன் ஆத்யவீர் ஆகியோர் கரும்புகளை வழங்கினர். (அடுத்த படம்) ஹாயாக 'சன் பாத்' எடுத்த யானைகள்.