ADDED : ஜன 20, 2025 07:11 AM

சாம்ராஜ் நகர்: பந்திப்பூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை யானைகள் வழிமறித்து அட்டகாசம் செய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் உள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இரவு 9:00 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இந்த நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வகையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில், யானை ஒன்று சாலையில் வந்த காய்கறி, பழங்களை ஏற்றி சென்ற லாரிகளை வழிமறித்து, பழங்களை சாப்பிட்டு அட்டகாசம் செய்தது. யானையை துரத்த முற்பட்ட போது, பதிலுக்கு யானை தாக்க வந்ததால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதனால், அப்பகுதியில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகளில் ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், இந்த நெடுஞ்சாலையில் செல்வதற்கு அச்சத்தில் உள்ளனர்.