செயற்கைக்கோள் வழி இணைய சேவை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு லைசென்ஸ்
செயற்கைக்கோள் வழி இணைய சேவை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு லைசென்ஸ்
UPDATED : ஜூன் 06, 2025 10:49 PM
ADDED : ஜூன் 06, 2025 06:51 PM

புதுடில்லி: செயற்கைக்கோள் வழியாக அதிவேக சேவையை இந்தியாவில் துவக்குவதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு லைசென்ஸ் வழங்கி உள்ளது.
நாட்டின் செயற்கைக்கோள் இணைய சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியார் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023ல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது. இதையடுத்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஏற்கனவே, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், ஸ்டார்லிங்க், குய்பர் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ளன. கடந்த 7ம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் அளித்தது.
இந்நிலையில், இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை துவக்குவதற்கான லைசென்சை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த லைசென்சை பெறும் 3வது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும்.
ஏற்கனவே ஸ்டார்லிங்க் நிறுவனம், செயற்கைகோள் வழியாக அதிவேக இணையதள சேவை வழங்க ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.