ADDED : ஆக 21, 2025 10:18 PM
கன்னாட்பிளேஸ்:ஜன்பத் மினி மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை டில்லி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.
தேசிய தலைநகரில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நகரின் 12 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு துாய்மை இயக்கத்தை கடந்த மே 1ம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார்.
அதன்படி ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கன்னாட் பிளேஸை ஒட்டியுள்ள ஜன்பத் மினி மார்க்கெட்டில் உள்ள சட்டவிரோத தெரு வியாபாரிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஜன்பத் மினி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தங்கள் பொருட்களை இரவு முழுவதும் சாலையோரங்களில் அப்படியே மூடிவிட்டுச் செல்வதை வியாபாரிகள் வழக்கமாக வைத்துள்ளனர். இது சட்டவிரோதம். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று காலை 8:00 மணியளவில் தொடங்கியது. முழுமையாக அகற்றப்பட்டன' என்றார்.