முன்னாள் அமைச்சர் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
முன்னாள் அமைச்சர் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
ADDED : பிப் 10, 2024 10:57 PM

லக்னோ, பண மோசடி தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லுாயிஸ் குர்ஷித்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
உத்தர பிரதேசத்தில், 2009 -- 2010ல், அரசின் நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்திய டாக்டர் ஜாகிர் ஹுசைன் நினைவு மருத்துவமனை, இதில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த மருத்துவமனையை, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லுாயிஸ் குர்ஷித் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இது தொடர்பான வழக்கை விசாரித்த எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கான நீதிமன்றம், லுாயிஸ் குர்ஷித்துக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு, வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.