அமலாக்கத்துறை, சி.பி.ஐ., கேட்டால் ஆவணங்களை பகிர கூடாது: ஜார்க்கண்ட் அரசு புது உத்தரவு
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., கேட்டால் ஆவணங்களை பகிர கூடாது: ஜார்க்கண்ட் அரசு புது உத்தரவு
ADDED : ஜன 10, 2024 06:06 PM

ராஞ்சி: அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிர கூடாது என ஜார்கண்ட் மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்து உள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வருக்கு 7முறை அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இந்நிலையில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிர கூடாது என ஜார்கண்ட் மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

