ADDED : டிச 29, 2024 06:51 AM

பெங்களூரு: வாடகைக்கார் ஓட்டுனர் துாக்க கலக்கத்தில் ஆழ்ந்ததால், அவரை உறங்க வைத்து விட்டு, தானே கார் ஓட்டி சென்ற மென் பொறியாளரை, பலரும் பாராட்டினர்.
வாடகைக்கார் ஓட்டுனர்கள் இரவு, பகலாக ஓய்வின்றி கார் ஓட்டுகின்றனர். சில சந்தர்ப்பங்களில், துாக்க கலக்கத்தில் காரை ஓட்டி, பயணியரிடம் திட்டு வாங்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
ஆனால், துாக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுனரை, உறங்க வைத்து விட்டு, மென்பொறியாளர் காரை ஓட்டியது பாராட்டை பெற்றுள்ளார்.
பெங்களூரில் வசிப்பவர் மென் பொறியாளர் மிலிந்த் சந்தவானி. வெளியூருக்கு சென்றிருந்த இவர், டிசம்பர் 26ம் தேதி இரவு, பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். வாடகைக் கார் புக் செய்து, நகருக்குள் வந்து கொண்டிருந்தார்.
ஓட்டுனர் அவ்வப்போது கண்களை மூடினார். ஆங்காங்கே காரை நிறுத்தி டீ குடித்துவிட்டு, சிகரெட் பிடித்துவிட்டு காரை ஓட்டினார். கார் உரிமையாளரிடம் ஓட்டுனர், 'என்னால் இரவு ஷிப்ட் பணி செய்ய முடியவில்லை. பகல் ஷிப்டில் பணியாற்றுகிறேன். என்னால் துாக்க கலக்கத்தை சமாளிக்க முடியவில்லை' என மொபைல் போனில் புலம்பினார்.
இதை கவனித்த மென் பொறியாளர் மிலிந்த் சந்தவானி, 'நீங்கள் உறங்குங்கள். நான் காரை ஓட்டுகிறேன்' என்றார்.
ஓட்டுனர் ஒரு நொடியும் யோசிக்காமல், கார் சாவியை கொடுத்து விட்டு, இருக்கையில் உறங்க துவங்கினார். அதன்பின் மிலிந்த் சந்தவானி, தானே காரை ஓட்டி கூகுள் மேப் உதவியுடன் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றார்.
நடந்த சம்பவத்தை அவர், இன்ஸ்டாகிராமில், பகிர்ந்து கொண்டார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

