UPDATED : மே 03, 2025 07:35 AM
ADDED : மே 03, 2025 06:21 AM

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தலைமறைவாக உள்ளனர்; பயங்கரவாதிகளை தேடுவதில், அடர்ந்த காடுகள், பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பைசரன் புல்வெளியில், 26 சுற்றுலாப் பயணியரை, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ராணுவம், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,), ஜம்மு - காஷ்மீர் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அடர்ந்த காடுகளிலும், பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சல்லடையாக தேடி வருகின்றனர். மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் குகைகள் போன்ற இயற்கை வசிப்பிடங்கள், பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளன. உள்ளூர் உளவாளிகள், பொதுமக்களில் சிலர், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த் டேட், சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
ஜம்மு - காஷ்மீர் போலீசார் கூறியதாவது:
குப்வாரா, ஹந்த்வாரா, அனந்த்நாக், டிரால், புல்வாமா, சோபூர், பாரமுல்லா, பந்திபோரா போன்ற பகுதிகள் கண்காணிப்பு பகுதிகளாக உள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் அனுதாபிகள், ஆதரவாளர்கள் இடையே உள்ள தொடர்புகளைக் கண்டறிய, போன் அழைப்பு பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதுவரை 100 நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்; சந்தேகத்துக்குரிய, 15 பேர்தீவிர விசாரணையில் உள்ளனர்.
ஹுரியத் மற்றும் ஜமாத்--இ-- இஸ்லாமி போன்ற பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த தேடுதல்களின்போது பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுஉள்ளன. பல அமைப்புகள் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாத தொடர்புகள் இன்னும் துண்டிக்கப்படாமலே உள்ளன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.