கேரளாவில் 8 லட்சம் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு பயிற்சி திட்டம்
கேரளாவில் 8 லட்சம் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு பயிற்சி திட்டம்
ADDED : செப் 29, 2024 11:50 PM
திருவனந்தபுரம் :கேரளாவில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
அரசுப் பள்ளி
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு கல்வித் துறையின் ஒரு பகுதியாக, 'கைட்' எனப்படும் கேரள கல்விக்கான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்ப பிரிவு, கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய பயிற்சி ஒன்றை துவக்கியுள்ளது.
'நுழைவுக்கான சாவி' என்ற பெயரிலான இந்த திட்டத்தை மாநில பொதுக்கல்வி அமைச்சர் சிவன்குட்டி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் கல்வி வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் நோக்கில் புதிய பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
'கைட்' சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி வாயிலாக மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவர். www.entrance.kite.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, இலவசமாக இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கான பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
நேரடி வகுப்பு
அறிவியல், வணிகம் உள்ளிட்ட படிப்புகள் தொடர்பான பாடத்திட்டம், வினா - விடை, மாதிரி பயிற்சி தேர்வு உள்ளிட்டவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
'கைட் விக்டேர்ஸ்' மற்றும் பிரதமர் இ - வித்யா சேனல்கள் வாயிலாக இந்த பயிற்சிக்கான நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
நேரடி வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்கள், இதற்காக துவங்கப்பட்டுள்ள கைட் யு டியூப் சேனல் வாயிலாக பயிற்சிக்கான பாடத் திட்டங்களை அறிந்து கொள்ள முடியும்.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணிதம், வரலாறு, அரசியல் அறிவியல், வணிகப் பாடம், ஆங்கிலம், புவியியல் போன்ற பாடங்களுக்கு தற்போது வகுப்புகள் எடுக்கப்படும்.
எதிர்காலத்தில், பிற பாடங்களுக்கும் வகுப்புகள் எடுக்கப்படும்.
இந்த முயற்சியை சீராக செயல்படுத்துவதை உறுதிசெய்ய, மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து தருமாறு அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.