நேபாள வன்முறையில் இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
நேபாள வன்முறையில் இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
ADDED : செப் 12, 2025 01:05 PM

காத்மாண்டு: நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஏராளமான இளைஞர்கள் கடந்த செப்., 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது.
கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 9ம் தேதி காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், சிங்க தர்பார் எனும் தலைமை செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இல்லம் ஆகியவற்றை சூறையாடினர். மேலும், பல கட்டடங்களுக்கு தீவைத்து நாசமாக்கினர்.
இந்த வன்முறையால் ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போது, நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேபாள போராட்டத்தின் போது, இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் காஷியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் கோலா,58, மற்றும் அவரது மனைவி ராஜேஷ் தேவி,55, ஆகியோர் தனது குழந்தைகளுடன் கடந்த செப்., 7ம் தேதி காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு சென்றுள்ளனர். செப்.,9ம் தேதி இரவு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த போது, அதன் உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
இதையடுத்து, ஹோட்டலுக்கு வெளியே பாதுகாப்பு மெத்தைகளை விரித்து, சுற்றுலாப் பயணிகளை வெளியே குதிக்குமாறு மீட்புக்குழுவினர் கூறியுள்ளனர். அதன்படி, 4வது மாடியில் இருந்த ராம்வீர் மற்றும் ராஜேஷ் தேவி ஆகியோர் வெளியே குதித்துள்ளனர். இதில் ராம்வீர் சிறுகாயங்களுடன் தப்பினார். ஆனால், ராஜேஷ் தேவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 10ம் தேதி இரவு ராஜேஷ் தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.