சட்டவிரோத 'தாபா'க்களை மூட சுற்றுச் சூழல் அமைச்சர் உத்தரவு
சட்டவிரோத 'தாபா'க்களை மூட சுற்றுச் சூழல் அமைச்சர் உத்தரவு
ADDED : ஏப் 18, 2025 09:25 PM

புதுடில்லி:சட்டவிரோத 'தாபா'க்களை அகற்ற சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு டில்லி ராஜோரி கார்டனில், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்த சிங் சிர்சா நேற்று ஆய்வு செய்தார். அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில், -50க்கும் மேற்பட்ட 'தாபா'க்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கடைகளின் உரிமம் குறித்து, உடன் வந்திருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். அவை எந்த அனுமதியும் இன்றி செயல்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, டில்லி மாநகர் முழுதும் சட்டவிரோதமாக இயங்கும் தாபாக்கள் மற்றும் இறைச்சி கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து, மஞ்ஜிந்த சிங் சிர்சா, நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டவிரோத தாபா மற்றும் இறைச்சிக் கடைகள் 'சீல்' வைக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும். டில்லி மாநகர் முழுதும் ஆய்வு செய்து, சட்டவிரோத தாபா மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளேன்.
மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில் பிரம்மாண்ட தண்ணீர் டேங்கர்கள் நிறுவப்படும்.
அந்த டேங்கர்களின் செயல்பாடு 'ஆன் - லைன்' வாயிலாக கண்காணிக்கப்படும்.
காலாவதியான மற்றும் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் டில்லிக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.