ADDED : ஜன 07, 2026 10:49 PM

புதுடில்லி: டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், பாஜமூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவை வேகம் அடைந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜ இடம்பிடித்துள்ளது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை வந்து இருந்தார். அப்போது அவரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் - ஐ சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து இபிஎஸ் டில்லி சென்றார். அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் டில்லியில் முகாமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இன்று இரவு அமித்ஷாவை அவரது இல்லத்தில் இபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம், பிரசாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. திமுக அரசின் ஊழல் குறித்து பட்டியலை சமீபத்தில் கவர்னரிடம் அளித்து இருந்தார். அந்தப் பட்டியலை அமித் ஷாவிடம் இபிஎஸ் வழங்கினார் என தகவல் வெளியாகி உள்ளது.

